search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழு நோயாளிகள்"

    திருவண்ணாமலையை சேர்ந்த கை, கால் இழந்த பிச்சைக்காரரும், தொழு நோயாளிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்கினர். #KeralaFloods #KeralaFloodRelief
    திருவண்ணாமலை:

    கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவிக்கின்றனர். அம்மாநில மக்களின் துயர் துடைக்க, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், கேரள மக்கள் படும்பாட்டை அறிந்த திருவண்ணாமலையை சேர்ந்த தொழுநோயாளிகள் சிலரும் மற்றும் பிச்சைக்காரர் ஒருவரும் நிவாரண தொகை அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை மல்லவாடியில் தொழுநோய் இல்லம் உள்ளது. இங்கு 70 முதல் 80 வயதுடையவர்கள் 36 பேரும், 15 வயது மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களும் உள்ளனர்.

    இவர்கள், கேரள மக்கள் வெள்ளப்பாதிப்பால் தவிப்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தனர். மேலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் கேள்விப்பட்டனர்.

    இதையடுத்து, தொழு நோயாளிகள் 38 பேரும் சேமித்து வைத்திருந்த 1035 ரூபாயை, கேரள நிவாரண உதவியாக கொடுத்தனர்.

    அதேபோல், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் 2 கைகள், ஒரு காலை இழந்து பிச்சை எடுக்கும் ஏழுமலை (45) என்பவரும் தன்னுடைய ஒருநாள் வசூல் தொகையான 100 ரூபாயை கேரள நிவாரணத்திற்காக கொடுத்துள்ளார்.

    திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவுக்கு நிவாரண தொகை வழங்கிய காட்சி.

    தொழுநோயாளிகள் மற்றும் ஒரு பிச்சைக்காரர் கொடுத்த மொத்த தொகை ரூ.1135-ஐ திருவண்ணாமலை சமூக சேவகர் மணிமாறன் பெற்று, கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

    அத்தோடு, சமூக சேவகர் மணிமாறன் தனது பைக்கை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் தொகையை நிவாரணமாக கொடுத்துள்ளார். இதுப்பற்றி அந்த சமூக சேவகர் கூறியதாவது:-

    பிச்சைக்காரர் ஏழுமலை ஆரம்பத்தில் கட்டுமான வேலை செய்தார். சென்டரிங் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் ஏழுமலைக்கு 2 கைககள் மற்றும் ஒரு கால் முழுவதும் துண்டானது.

    கை, கால் இல்லாமல் அவதிப்படும் அவர், வாழ வேறு வழியின்றி பிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு மனைவியும் உள்ளார். ஒரு நாள் பிச்சை எடுத்தால் 100 ரூபாய் கிடைப்பதே அரிது.

    அந்த சிறு தொகையில் தான் அவரும், அவருடைய மனைவியும் சாப்பிட வேண்டும். இந்த ஒரு சூழ்நிலையில் கேரள மக்கள் படும்பாட்டை எண்ணி வருத்தமடைந்தார். தன் பங்களிப்பாக ஒரு நாள் பிச்சையெடுத்ததில் வசூலான 100 ரூபாயை கொடுத்துள்ளார் என்றார்.

    சமூக சேவகர் மணிமாறன், கடந்த 16 ஆண்டுகளாக சுயமாக இயங்க முடியாத கை, கால்களை இழந்தவர்கள், தொழு நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார்.

    இதற்காக மத்திய-மாநில அரசுகளிடம் இருந்தும் அவர் விருது பெற்றுள்ளார். கை, கால்களை இழந்த பிச்சைக்காரரும், தொழு நோயாளிகளும் கேரள நிவாரணம் வழங்கியிருப்பது உதவியே செய்யும் குணமே இல்லாத கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய செய்துள்ளது.  #KeralaRain #KeralaFloods
    ×